Hemas Consumer பசுமையான இலங்கைக்காக, மழைக்காடு பாதுகாப்பாளர்களுடன் கூட்டிணைகிறது

Author
Author

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer, Rainforest Protectors Sri Lanka (இலங்கை மழைக்காடு பாதுகாவலர்கள்) அமைப்புடன் இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீள காடுகளாக்கும் திட்டத்திற்காக கைகோர்த்துள்ளதன் மூலம், பாதிப்புக்குள்ளாகி வரும் சுற்றாடல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இக்கூட்டாண்மையானது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Hemas Consumer நிறுவன தலைமை அலுவலகத்தில் Hemas Consumer சந்தைப்படுத்தல் பணிப்பாளர் fபியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, Hemas Consumer சந்தைப்படுத்தல் முகாமையாளர் அஸ்மரா மன்னன் பெரேரா, Hemas Consumer தரக்குறியீடு முகாமையாளர் ஷெர்லின் குணநாயகம், Rainforest Protectors அழைப்பாளரும் அதன் பிரதான அமைப்பாளருமான ஜயந்த விஜேசிங்க, அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் லக்மாலி ஜயரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் நிலைபேறான வன முகாமைத்துவ நடைமுறைகளை கொண்டுவருதல் மற்றும், காடுகளைப் பாதுகாப்பதற்கான சமூக பொறுப்பு தொடர்பான அதன் ஆதரவை வழங்குவதற்கான நோக்கத்துடன் இத்திட்டத்தில் ஹேமாஸ் தனது ஈடுபாட்டை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை Hemas Consumer கண்காணித்து மதிப்பீடு செய்யும் என்பதோடு, வனப்பகுதியை அதிகரித்து பசுமையான இலங்கையை நோக்கிய விழிப்புணர்வு உருவாகியுள்ள இந்த சரியான தருணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு அவசியமான வழிகாட்டலையும் தேவையான உந்துதலையும் வழங்கும்.

ஹேமாஸின் மிகவும் பிரபலமான தனிநபர் பராமரிப்பு தரக்குறியீடுகளான பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகியன இணைந்து இந்நீண்ட கால திட்டத்தை வெற்றிகரமாக்கவுள்ளன. அதன் மூலம் எதிர்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு அவசியமான வனப்பகுதிகளை பராமரிக்கும் அதே வேளையில், வனப் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கான ஒரு ஊக்கியாகவும் செயற்படவுள்ளது. இலங்கையில் வன சூழல்தொகுதியை விருத்தி செய்வதற்கு Hemas Consumer பகிரப்பட்ட நோக்கத்தை கொண்டுள்ளது. காடழிப்பு மூலம் ஏற்படும் தாக்கத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் சிங்கராஜ வனத்திற்கு அருகில் காணப்படும் கத்தலான பகுதியிலுள்ள நிலப்பரப்பை மீள் காடாக்கம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு மீள் காடாக்க முயற்சிகளுக்கு இதற்கு முன்னர் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புதிய கூட்டாண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த Hemas Consumer நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் fபியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, “இப்புதிய மீள் காடாக்கம் தொடர்பான முயற்சியை செயல்படுத்த Rainforest Protectors அமைப்புடன் கூட்டிணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். Hemas Consumer ஆகிய எமக்கு இது ஒரு தொடக்கம் மாத்திரமே, ஏனெனில் மீள் காடாக்கம் மற்றும் உயிரியல் பல்வகைமையை பாதுகாத்தல் தொடர்பில் எம்மிடம் பல்வேறு திட்டங்கள் காணப்படுகின்றன. இக்கூட்டாண்மை மூலம் இயற்கை மற்றும் உயிரியல் பல்வகைமை மீதான எமது முதலீடுகள் உயிரோட்டம் அடைவதை எம்மால் காண முடிந்துள்ளதோடு, அதற்காக எம்மை அர்ப்பணிப்பதுடன், இக்கூட்டாண்மை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உயிரியல்  பல்வகைத்தன்மையை அதிகரிப்பதற்கும், சூழல்தொகுதியை மீளுருவாக்கம் செய்வது தொடர்பில் ஹேமாஸ் முற்றுமுழுதாக உறுதிபூண்டுள்ளது.” என்றார்.

சமூக ஆதரவு முயற்சிகள் தொடர்பில், வலுவான ஆர்வத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை எனும் எண்ணக்கருவை ஹேமாஸ் முன்னோடியாகக் கொண்டுள்ளது. இக்கூட்டு முயற்சிகளானது, பொதுமக்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளுக்கு இதுபோன்ற நாடளாவிய முயற்சிகளில் பங்கெடுப்பதை ஊக்குவிப்பதற்கான அழைப்பு என ஹேமாஸ் அடையாளப்படுத்தியுள்ளது.

இலங்கையின் மழைக்காடு பாதுகாவலர்கள் (Rainforest Protectors of Sri Lanka) என்பவர்கள், விசாரணை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பாதுகாப்பு, மீள்கட்டமைத்தல் முயற்சிகள் மூலம் இலங்கையில் எஞ்சியுள்ள மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, தன்னார்வலர்கள் மற்றும் அனுசரணையாளர்களைக் கொண்ட குழுவாகும். இலாப நோக்கற்ற இச்சுற்றாடல் அமைப்பானது, சிங்கராஜ மற்றும் கன்னெலிய போன்ற மழைக்காடுகள் உள்ளிட்ட சூழல் தொகுதிகளை பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ள அமைப்பாகும் என்பதுடன், மழைக்காடு பாதுகாப்பாளர்கள் அறக்கட்டளை மூலம், மழைக்காடு நிலப்பரப்புகளை பாதுகாப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.

Rainforest Protectors அமைப்பின் அழைப்பாளரும் அதன் பிரதான அமைப்பாளருமான ஜயந்த விஜேசிங்க கருத்து வெளியிடுகையில் “உயிர்ப் பல்வகைமை மற்றும் வாழ்விடங்களின் அழிப்பு போன்ற பாதகமான சூழ்நிலைகளை வெற்றி கொள்ள, மீள் காடாக்கல் பிரச்சார நடவடிக்கைகள் உதவுமென நாம் நம்புகிறோம். பெரும்பாலான மர நடுகை பிரச்சாரங்கள் தற்காலிகமானவையாகவே காணப்படுகின்றன. ஆயினும், இது போன்ற நீண்ட கால மீள் காடாக்கல் திட்டங்கள் உயிர்ப் பல்வகைத்தன்மையைப் பாதுகாப்பதில் மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக காணப்படுவதோடு,  எமது எதிர்கால சந்ததியினரின் நிலைப்புக்கு அவசியமான வனப்பகுதியை பேணவும் அவை உதவுகின்றன.” என்றார்.

மீள் காடாக்கமானது, பூமிக்கு பல்வேறு வழிகளில் மிகவும் நன்மை பயக்கும் விடயமென நிரூபிக்கப்பட்டுள்ளது. மீள் காடாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், வனவிலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் வாழ்விடமாக மாறியுள்ள அதே நேரத்தில், அழிவடைந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கவும் உதவுகின்றன. இவ்வாறு நடப்படும் மரங்கள் வளர்ந்து அவற்றினால் வளி உள்ளெடுக்கப்படும்போது, ​​காற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் மாசுக்களை அகற்றுவதன் மூலம் அவை காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. மீள் காடாக்கமானது, வெள்ளம் மற்றும் மண்ணரிப்பு போன்றவற்றின் தாக்கத்தை குறைப்பதோடு, சிறந்த நீர் வளங்களை வழங்கவும் உதவுகின்றன. அத்துடன் புவியில் வாழும் உயிரினங்களின் நிலைப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, காற்றில் காணப்படும் மிக அதிகளவான வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுவதையும் அது உறுதி செய்கிறது. அத்துடன், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை தூண்டும் ஆற்றல் கொண்ட, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற மிகப் பெரும் பாதிப்புகளை எதிர்த்து போராடும் இறுதி ஆயுதமாக, மீள் காடாக்கம் அமைகின்றது.

Hemas Consumer ஆனது, வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராகும். ஹேமாஸ் நிறுவனம், குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வடிப்படை நம்பிக்கையானது 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்று, இம்முன்னணி மக்கள் மைய நிறுவனம், நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வருகிறது. இலங்கையின் சமூக பொருளாதாரத்தின் கவசமான Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து வருவதோடு, முக்கிய சுற்றாடல் முன்னெடுப்புகளை வழிநடாத்தி, அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றி கொள்கிறது.

புகைப்பட விளக்கம்

  1. (இடமிருந்து வலம்) Hemas Consumer சந்தைப்படுத்தல் முகாமையாளர், அஸ்மரா மன்னன் பெரேரா, தரக்குறியீட்டு முகாமையாளர், ஷெர்லின் குணநாயகம், சந்தைப்படுத்தல் பணிப்பாளர், fபியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, Rainforest Protectors அமைப்பின் அழைப்பாளரும் பிரதான அமைப்பாளருமான ஜயந்த விஜேசிங்க, Rainforest Protectors அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லக்மாலி ஜயரத்ன
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *